புதுடெல்லி: மத்திய அரசு விரைவில் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவைக் கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.
இதன்மூலம், மருத்துவக் கல்வித் துறையில் பெரியளவிலான சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த) மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்தபோது அவர் இதை தெரிவித்தார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
இந்த மசோதாவின் மூலம், இந்திய மருத்துவக் கவுன்சிலின் நேரடி செயல்பாட்டை, மருத்துவக் கல்வி தொடர்பான விஷயத்திலிருந்து விலக்கி வைத்து, அந்த இடத்தில் வாரிய இயக்குநர்களை வைத்து விரும்பிய மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரிய இயக்குநர்களின் குழு செயல்பட்டு வருகிறது. இவர்களின் செயல்பாடு, மருத்துவக் கல்வி சீர்திருத்த விஷயத்தில் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ஹர்ஷவர்தன்.