சென்னை:
மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒரு மனதாக வைகோவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். இதன் காரணமாக, அவர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
சென்னையில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், வைகோ உள்பட 35 நிர்வாகி கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத் தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இறுதியில், மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்படுவதாக திமுக உறுதி அளித்தது. அதன்படி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மதிமுக நிர்வாகி கணேச மூர்த்தி வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யாகி உள்ளார்.
தற்போது மாநிலங்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக ஏற்கனவே உறுதி அளித்தபடி, மதிமுகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கியது. அதன்படி மாநிலங்களவைக்கு வைகோ தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பு வரும் 5ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக உயர்மட்டக்குழு கூட்டம் இன்று கூடியது. அதில் ராஜ்ய சபாவுக்கு வைகோவே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.