மும்பை
நான்கு தினங்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் மும்பை நகரம் கடும் பாதிப்பு அடைந்து விமான சேவை முழுவதுமாக நிறுத்தபட்டுள்ளது.
மும்பை நகரில் இந்த வருடம் தென் மேற்கு பருவமழை 15 நாட்கள் தாமதமாக தொடங்கியது. கடந்த நான்கு நாட்களாக நகரெங்கும் கனமழை விடாமல் பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகள் முடங்கி போய் உள்ளது. மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 19 ஐ எட்டி உள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை நகரின் முக்கிய போக்குவரத்தான ரெயில்வே தடத்தில் இருப்புப் பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஓடு தளத்தினுள் வெள்ள நீர் புகுந்து பாதையை மூழ்கடித்துள்ளது. இதை ஒட்டி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வரும் 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
நகரெங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மும்பை நகரில் மட்டும் 400 செ மீ மழை பெய்துள்ளது.