சென்னை:
டிடிவி தினகரனின் முக்கிய நிர்வாகியான நெல்லையை சேர்ந்த இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் டிடிவி தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தேனி தங்கத்தமிழ் செல்வன், திமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அமமுகவின் முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையாவும் திமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளது டிடிவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கலகலத்து போய் உள்ளது. ஏற்கனவே பலர் அதிமுக, திமுக என்று மாற்றுக்கட்சிகளை நோக்கி ஓடிய நிலையில், முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி, தனது சகாக்களுடன் திமுகவில் இணைந்து, திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாகவும் தேர்வாகி விட்டார்.
நடைபெற்ற முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் அமமுக கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், டிடிவியை நம்பி பயனில்லை என்று பல அமமுக நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார்கள். சிலர் திமுகவுக்கு சென்றனர்.
இந்த நிலையில், டிடிவி கட்சியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த நெல்லையை சேர்ந்தவரும், தென் சென்னை வேட்பாளராக போட்டியிட்டவருமான இசக்கி சுப்பையா, தேர்தல் தோல்விக்கு பிறகு டிடிவிமீது அதிருப்தியில் இருந்து வந்தார். தினகரனின் ஆவணவப் பேச்சால் நொந்து போன இசக்கி சுப்பையா, டிடிவியை சந்திப்பதை தவிர்த்து, தனது சொந்த ஊருச்ககு சென்றார். அங்கு குற்றாலத்தில் உள்ள எஸ்டேட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்தும், திமுகவில் இருந்து அவருக்கு அழைப்பு செல்ல எங்கு செல்வது என்று குழம்பி இருந்து வந்த இசக்கி சுப்பையா, தற்போது திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் உடன் இருந்தால், தங்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை உணர்ந்துள்ள அமமுக நிர்வாகிகள் பலர், அங்கிருந்து பறந்து செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், இசக்கி சுப்பையாவும் மாற்றுக்கட்சி தாவ தயாராகி வருகிறார்.
மீண்டும் தாய்க்கழகத்திற்கே செல்லலாம் என்று நினைத்த இசக்கி சுப்பையா, அதிமுகவில் உள்ள இரட்டை தலைமை காரணமாக அங்கு திறம்பட பணியாற்ற முடியாத சூழல் உள்ளதால், திமுகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், தன்னுடன் அமமுக மாநில அளவில் நிர்வாகிகள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை ஒரு பட்டாளத்துடன் திமுகவில் ஐக்கியமாக உள்ளதாகவும், இதற்காக திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இசக்கி சுப்பையா திமுகவுக்கு சென்று விட்டால், அமமுக கட்சி காலி பெருங்காய டப்பாவாகிவிடும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஏற்கனவே டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால், தங்களது பதவியை இழந்து அரசியல் அனாதை யான அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவி மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், சமீபத்தில் சபாநாயகர் நோட்டீஸ் வழங்கப்பட்ட மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்களும் நாங்கள் அதிமுக வில்தான் இருக்கிறோம், அதிமுக சொல்வது படி செயல்படுவோம் என்று டிடிவிக்கு டாடா காட்டி விட்டனர்.
இந்த நிலையில் இசக்கி சுப்பையா திமுகவில் ஐக்கியமாக இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகம் கூட இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான இடத்தில் தான் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.