மும்பை
தம்மை தற்கொலை படை என விமானநிலையத்தில் சொல்லிக் கொண்ட அகமதாபாத் தொழிலதிபர் மும்பை சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
கடந்த வாரம் லண்டனுக்கு சென்றுக் கொண்டிருந்த ஒரு ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைக்கபட்டதாக ஒரு ஈ மெயில் செய்தி வந்தது. அதை ஒட்டி அந்த விமானம் அவசரமாக லண்டனில் தரை இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த விமானத்தில் குண்டு இல்லாத போதிலும் அனைத்து விமான நிலயங்களிலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது நடந்த அடுத்த நாள் அதாவது வெள்ளிக்கிழமை அன்று துபாய் செல்ல அகமதாபாத் நகரை சேர்ந்த தொழிலதிபர் அதுல் படேல் என்பவர் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தாம் ஒரு தற்கொலை படை போராளி எனவும் தம்மை சீக்கிரமே சோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தபட்டது.
அகமதாபாத் நகரில் ஒரு டிராவல் ஏஜன்சி நடத்தி வரும் அதுல் படேலிடம் விசாரணை நடந்த போதும் அவர் அதையே சொல்லி உள்ளார். அவரிடம் இதை எழுதி தருமாறு கேட்டதற்கு அவர் இந்தியில் ”நான் ஒரு தற்கொலைப்படை போராளி. என்னை சீக்கிரம் சோதிக்கவும்” என எழுதி உள்ளார். அவரிடம் எந்த ஒரு வெடிகுண்டும் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
அவரை கைதுசெய்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். படேல் அவ்வாறு தெரிவித்ததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இந்த குற்றத்துக்கு ஆறு வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.