சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை வரவேற்ற துடன், குடிநீர் பிரச்சனையை தீர்க்க தவறியதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் தோல்வி அடைந்துவிட்டது என்றும், தமிழக தண்ணீர் பிரச்சினை குறித்து ஒரு நாள் முழுவதும் விவாதிக்க நேரத்தை ஒதுக்கும்படியும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால்,அவரது கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழகஅரசு மீது புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறிய குற்றச்சாட்டு குறித்து பேசினார். ஆனால், கிரண்பேடி தொடர்பாக ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.