நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு அமைத்து  தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றின் கரையில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான கழிவறை மற்றும் குளியலறை உள்ளது. இங்கு குளிக்க மற்றும் கழிவறையை பயன்படுத்த பக்தர்களிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கழிவறை பயன்பாட்டிற்கு, கோயில் அருகில் வைகையாற்றில் அனுமதியின்றி உறை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.