சென்னை:
நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை காரணமாக ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகள் காலியாக உள்ளன.
கடந்த 2018 -ம் ஆண்டு ஆயுஸ் எனப்படும் இந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அப்போது மொத்தமுள்ள 1,515 இடங்களில் 516 இடங்கள் காலியாக இருந்தன.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது,” பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
பாரம்பரிய மருத்துவம் தொடர்பான படிப்புகளை நீட் தேர்வின் கீழ் கொண்டுவராததால், கடந்த ஆண்டு பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போது இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஆயுஸ் எனப்படும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்த படிப்புகளுக்கு விதிவிலக்கு பெற முயற்சித்து வருகிறோம்” என்றார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதேசமயம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைப்பது அரிதுதான்” என்றனர்.
இதற்கிடையே, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் ஆணையகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாரம்பரிய மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கூறும்போது, ” பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கொண்டுவரக் கூடாது. இது போன்ற படிப்புகளை பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே தேர்வு செய்கின்றனர்.
அவர்களுக்கு நீட் தேர்வை பற்றி தெளிவான நிலை ஏற்படாதவரை அவர்களால் வெற்றி பெற இயலாது.
பல மாணவர்கள் தேர்விலேயே கலந்து கொள்ள மாட்டார்கள். ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வந்தால், 50 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் போகும்” என்றனர்.
இது குறித்து சித்த மருத்துவர் செல்வின் இன்னொசன்ட் தாஸ் கூறும்போது, “கடந்த ஆண்டு இந்தப் படிப்புகளுக்கு சேருவதற்கான குறைந்தபட்ச பிளஸ் டூ மதிப்பெண் 35 சதவீதமாக குறைத்து தேர்வு குழு அறிவித்தது.
அப்படியிருந்தும், யோகா படிப்புகளில் 60 சதவீத இடங்களும், ஹோமியோபதியில் 40 சதவீத இடங்களும் நிரப்பப்படவில்லை.
எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்காதவர்கள் மற்ற மருத்துவப் படிப்புகளுக்கு செல்வதால் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் போகின்றன” என்றார்.