ஒசாகா:

ப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 2 நாள்  ஜி-20 உச்சி  மாநாடு நடைபெற்றது. இதில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் குவிந்தனர். அங்கு பல்வேறு நாடுகளுக்கு இடையே பல தரப்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில்,  அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே  நிலவி வரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்க இரு நாட்டு அதிபர்களும் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் பல சீன பொருட்களுக்கு கூடுதலான சுங்க வரியை விதித்து வந்த நிலையில், ஏட்டிக்குப்போட்டியாக அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் மீது சீனாவும் சுங்க வரியை அதிகரித்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெற்றது. நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்காவிக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு கட்டணங்களை குறைக்க வாஷிங்டன் ஒப்புக் கொண்டதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில்” பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பின்போது, “சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பு மூலமே வெற்றி பெற முடியும் என்றும்,  இருவரும் சண்டையிடுவதால் அது தோல்வியிலேயே முடியும்” என்றும்,   “ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் சீனா-அமெரிக்க உறவுகளை ஊக்குவிக்க” நாங்கள் விரும்புகிறோம்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.