இடாநகர்: இந்தியாவின் எல்லைப்புற இமாலய மலை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் மனோரியா இம்ப்ரெஸ்ஸா என்ற பெயரைக் கொண்ட அரிய வகை ஆமை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆமைகள் தொடர்பான ஆராய்ச்சியில் இது ஒரு அடுத்தப் படிநிலை என்று கருதப்படுகிறது.
வனத்துறையின் ரேஞ்சர் நிலையிலுள்ள அதிகாரியான பண்டி தாவோ என்பவர், அருணாச்சாலப் பிரதேச மாநிலத்தின் காம்லே மாவட்டத்தைச் சேர்ந்த ஹபோலி வனச் சரகத்தில், ஒரு கிராமத்து நபரிடமிருந்து அந்த ஆமையைக் கைப்பற்றினார்.
அந்த ஆமையை தனது கையில் வைத்து, சமையலுக்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த அந்த நபரிடமிருந்து ஆமையை வாங்கி பார்த்ததில், அது ஒரு வித்தியாசமான ரகத்தைச் சேர்ந்த ஆமை என்பதைக் கண்டறிந்தார். உடனே, அதுகுறித்து சமூகவலைதளங்களிலும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
“நான் இதற்கு முன்னர் பலவகையான ஆமைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆமை வித்தியாசமான ரகத்தை சேர்ந்ததாக உள்ளது. இந்தப் புதிய ஆமையின் வரவானது, ஆமைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய உற்சாகத்தை உண்டாக்கும்” என்றார் பண்டி தாவோ.