சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி, அத்தேர்தலில் திமுக ஆதரவுடன் வைகோ போட்டியிடுவார் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜுன் மாதம் 30ம் தேதியன்று, மதிமுகவின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலின்போது, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு நடந்தபோதே மதிமுகவுக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தலா 1 சீட் வீதம் ஒதுக்கப்பட்டது. அப்போதே அந்த இடத்தில் நிச்சயம் வைகோதான் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
திமுகவில் இருந்தபோது, வைகோ ஏற்கனவே 18 ஆண்டுகள் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். ஈழப் பிரச்சினையின்போது இவர் ஆற்றிய உரைகள், முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை கவர்ந்துள்ளன. இவருக்கு ‘நாடாளுமன்ற புலி’ என்ற ஒரு பட்டப்பெயரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.