சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திமுக ராஜ்யசபா இடம் கொடுக்க சம்மதித்ததாகவும், பின்னர் பாரதீய ஜனதாவுக்கு பயந்து தற்போது மறுத்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பறந்து திரியும் பட்சிகள் தங்களின் விருப்பம்போல் ஒலியெழுப்புகின்றனர்.
ஆனால், திமுக எதற்காக மன்மோகன்சிங்கை ராஜ்யசபைக்கு அனுப்ப சம்மதிக்க வேண்டும்? எதற்காக பாரதீய ஜனதாவுக்கு பயப்பட வேண்டும்? என்ற அடிப்படையான கேள்விகள் எழுகின்றன.
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 10 இடங்களை வாரி வழங்கிவிட்டோமே! என்ற குரல்கள் திமுகவில் ஓங்கி ஒலித்தன. அதேசமயம், அந்தக் கூட்டணி வெற்றிபெற்றாலும், தேசியளவில் காங்கிரஸ் பெரிய தோல்வியை சந்தித்துவிட்டதால், திமுக முகாமில் மிகப்பெரிய ஏமாற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரசின் வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிட வேண்டும் என்ற குரல்களும் அக்கட்சியில் ஒலிக்கிறது. இந்த நிலையில், 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் ஒரு ராஜ்யசபா பதவியை காங்கிரசுக்கு அவ்வளவு எளிதாக திமுக கொடுத்துவிடுமா? என்ற அடிப்படை கேள்வி எழுகிறது.
மேலும், பாரதீய ஜனதாவுக்கு அஞ்ச வேண்டிய சூழலும் திமுகவிற்கு இல்லை. பாரதீய ஜனதாவிற்கு எதிராக, இந்தியாவிலேயே முதன்முதலாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த கட்சிதான் திமுக.
எனவே, மன்மோகன்சிங்கை ராஜ்யசபைக்கு அனுப்ப திமுக முதலில் ஒத்துக்கொண்டு, பின்னர் பாரதீய ஜனதாவிற்கு பயந்துகொண்டு மறுத்துவிட்டது என்று உலாவரும் தகவல்கள் எல்லாம் வெறும் வதந்திகளாகத்தான் இருக்க முடியும்.