டொரான்டோ: கனடா நாட்டில், விமானத்தில் பயணித்தபோது ஆழ்ந்து உறங்கிவிட்டதால், தரையிறங்கிய விமானத்திலேயே தனித்து விடப்பட்டு, பூட்டிய இருட்டு விமானத்திற்குள் பெண் ஒருவர் தவித்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் கியூபெக் பகுதியிலிருந்து டொரான்டோ நகருக்கு ‘ஏர் கனடா’ விமானத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி பயணம் செய்துள்ளார் டிஃபானி ஆடம்ஸ் என்ற பெண்மணி. பயண நேரம் 1.5 மணிநேரம். ஆனால், நடுவழியிலேயே உறங்கி விட்டிருக்கிறார் அவர்.

பின்னர், விமானம் தரையிறங்கியப் பிறகு, அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை யாரும் கவனிக்காமல், உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, விளக்குக‍ள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விமானத்தின் மின்சாரத்தையும் அணைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

சில மணிநேரம் கழித்து நள்ளிரவில் எழுந்த அந்தப் பெண், எங்கும் சுற்றிலும் இருட்டாக இருப்பதைப் பார்த்து, அணைந்துவிட்ட தனது செல்ஃபோனிலும் யாரையும் அழைக்க முடியாமல், எப்படியோ ஒரு டார்ச் லைட்டை கண்டறிந்து, விமானத்தின் மெயின் கதவிற்கு வந்து திறந்து, வாசலில் நின்றுகொண்டு, சரக்கு வாகன ஓட்டி ஒருவரிடம் சிக்னல் காட்டி, அவரின் உதவியுடன் இறங்கி, இறுதியாக ஏர் கனடா அலுவலகத்திற்கு சென்று அங்கே முறையிட்டிருக்கிறார்.

விமானத்திலிருந்து விழித்த சிறிதுநேரத்திற்கு, நடப்பது கனவா? அல்லது நனவா? என்ற சந்தேகமே அவருக்கு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்ச்சி அனுபவத்தை ஏர் கனடா முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அப்பெண்மணி.