சென்னை:
தமிழகத்தில் மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கு 53,176 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 26ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அத்துடன் இந்த ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்களும், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் வழக்கம் போல் 100 இடங்கள் உள்ளது.18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான ஒதுக்கீடு நீட் தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது. கடந்த 5ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மருத்துவ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 6ந்தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை அரசு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர 25,388 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வரும் 26 ஆம் தேதி மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.