சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள பாரம்பரியம் மிக்க மருத்துவமனையான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் தண்ணீரின்றி மூடப்பட்டு உள்ளதாக பத்திரிகை.காம் ஆதாரத்துடன் இன்று காலை செய்தி வெளியிட்டது. மேலும் பல ஊடகங்களும் தண்ணீர் பிரச்சினை குறித்து  செய்திகள் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில்,  பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்ததாக  ராஜீவ்காந்தி மருத்துவமனை விளக்கம் அளித்து உள்ளது. மூடப்பட்ட கழிவறை களுக்கான மாற்று ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.

சென்னையை வாட்டி வதைத்து வரும் தண்ணீர் பஞ்சம் பொதுமக்கள் மட்டுமின்றி, மருத்துவ மனைகள்,  உணவகங்கள், பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் பாடாய் படுத்தி வருகிறது.

தண்ணீர் பிரச்சினையால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் நோயாளி களும் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல வார்டுகளில் கழிவறைகள் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் கழிவறைகள் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டது நோயாளிகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.  இது தொடர்பான செய்திகள் மற்றும் படங்கள்  வெளியாகி, உண்மை நிலவரத்தை வெளிச்சம் போட்டு காட்டின.

ஆனால், சென்னையில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அரசு மருத்துவமனையின் தண்ணீர் பிரச்சினை ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியானது.

இந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடடினயாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளதாகவும், மருத்துமனையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள நிர்வாகம், 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் நெருக்குதல் காரணமாகவே, மருத்துவமனை டீன் அவசர மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையின் விளக்கம் காரணமாக, மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சினை நீடித்து வருவதும் உண்மையாகி உள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வசதி செய்யப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ள நிர்வாகம், மூடப்பட்ட கழிவறைகளை திறப்பது குறித்து தெரிவிக்காமல், மாற்று ஏற்பாடுகள் செய்வதாகவே கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.