சென்னை

சென்னை அண்ணா நகரில் ஒரே நாளில் போக்குவரத்து விதியை மீறிய 90,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவது சகஜமாகி வருகிறது.   குறிப்பாக சென்னை அண்ணா நகர் நெரிசலில் பலர் யூ டர்ன் இல்லாத இடங்களில் திரும்புவது,  தவறான திசையில் செல்வது,  சிக்னலை மதிக்காமல் செல்வது போன்றவை அதிகம் நடைபெறுகிறது.   இவ்வாறு விதிகளை மீறுபவர்கள் அனைவரையும் காவல்துறையினரால் பிடிக்க முடிவதில்லை.

சென்னை அண்ணா நகரில் முக்கிய சந்திப்புக்களான அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி, எஸ்டேட் சாலை, 18 ஆவது பிரதான சாலை, மற்றும் அண்ணாநகர் காவல்நிலைய சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படன.  இந்த காமிராக்களில் தானியங்கி நம்பர் பிளேட் படிக்கும் மென் பொருள்  பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காமிராக்கள் அண்ணா நகர் ரவுண்டானாவில் உள்ள கட்டுப்பாட்டு  அறை மூலம் கண்காணிக்கப்பட்டன.   போக்குவரத்து விதி மீறல் செய்தவர்களின் வாகன நம்பர் மூலம் விலாசம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு  நோட்டிஸ் அனுப்பப்பட்டு வருகிறது.   அவ்வகையில் கடந்த திங்கட்கிழமை மட்டும் 90,000 பேருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களில் சிலருக்கு 24 மணி நேரத்துக்குள் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ஒரு சிலருக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வர வேண்டும் எனவும் அந்த நோட்டிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் ஒரு சில வாகனங்கள் விற்கப்பட்ட பிறகும் உரிமையாளர் பெயர் மாற்றப்படாததால் இந்த நோட்டிஸ் பழைய உரிமையாளருக்கு சென்றுள்ளது.