பெங்களூரு:
வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே கழிந்துள்ள நிலையில், அவரை நன்னடை விதிகள் அடிப்படையில் சிறையில் இருந்த விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி விடுதலை செய்ய கர்நாடக மாநில அரசு முயற்சித்தால், அதை எதிர்த்து , தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் ஆச்சார்யா வழக்கு தொடருவார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது… இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா அங்கு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஸ்டவ் உள்பட அனைத்துவித வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போதைய டிஐஜி ரூபா சிறையில் நடத்திய அதிரடி சோதனையில், சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் சொகுசாக வாழும் வகையில், அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அப்போதைய முதல்வர் சித்தராமையா உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தியது. அதில், “சசிகலாவுக்காக பரப்பன அக்ரஹாரா சிறையில் விதி மீறல் நடந்துள்ளது உண்மையே. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. சிறை விதிகளை மீறி அவருக்கு வசதிகள் செய்து தரப்பபட்டுள்ளது என்றும், சசிகலா சிறையில் உல்லாசமாக வாழ்ந்து வந்ததை உறுதி செய்தது.
ஆனால், இந்த விஷயத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு கிடப்பில் போடப்பட்து. சசிகலா மீது குற்றம் சாட்டியி டிஐஜி ரூபாதான் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போதைய குமாரசாமி – காங்கிரஸ் கூட்டணி அரசும் சசிகலா தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை விடுதலை செய்யவே ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக சசிகலா தரப்பில் ஜேடிஎஸ், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து சரிகட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாகவே இன்னும் சுமார் ஒன்றரை ஆண்டு காலம், அவருக்கு சிறை தண்டனை உள்ள நிலையில், முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து கர்நாடக அரசிற்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் அவர் வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறை விதிகளின்படி, நன்னடத்தை அடிப்படையில் அவரை 1 ஆண்டுக்கு முன்பாகவே விடுவிக்க லாம். அதன்படி, அவரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி விடுதலை செய்யலாம். ஆனால், சசிகலாவை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் எனவும் சிறைத்துறை நிர்வாகம் அம்மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சசிகலா முன்கூட்டி விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து, சொத்துக்குவிப்பு தண்டனை வழக்கில் தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சாரியா கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
அதுபோல, சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்த திமுக, சசிகலா விடுதலையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு – சிறை ஒரு பார்வை
1991-96 ம் ஆண்டி ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது , ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கில், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேன் டிகுன்ஹா ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு கூறினார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. உடனடியாக 4 பேரும் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ‘விசாரணை கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இதற்கிடையில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப் பட்டனர்.
அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், சசிகலா சிறை வார்டன்களுக்கு பணத்தை வாரி இறைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வும் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை ஜெயிலில் கழித்து விட்டால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.
மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.
இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின்படி, சசிகலா 2021-ம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும். ஆனால் நன்னடத்தை அடிப்படையில் அவரை 1 ஆண்டுக்கு முன்பு விடுவிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.