சென்னை:

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி ஏற்ற பிறகுதான், அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பணம் வாங்கிக்கொண்டு மாணவ மாணவிகளை  பாஸ் செய்தால், அதிக மதிப்பெண்கள் வழங்குதல், மறுதேர்வு, மறு கூட்டல் போன்ற வற்றில் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண்கள் வழங்கியதால், குறிப்பாக என்ஆர்ஐ மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, அவர்களை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கியது போன்ற ஏராளமான  ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த ஊழலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் புளங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு, பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் அரசின் உயர் கல்வித்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்த முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.

அதுபோல  தமிழகத்திலுள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மாணவர் சேர்க்கை இல்லாத, 92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

அவற்றுள் ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்தியும், ஒரு சில கல்லூரிகளில் பாதியாக குறைத்தும் பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தரமற்றவை என அறிவிக்கப்பட்ட 92 கல்லூரிகளுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி நடவடிக்கையை வரவேற்றனர். ஆனால், அரசு தரப்பும், தனியார் கல்லூரிகளும், சூரப்பாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிட்தத  92 தரமற்ற கல்லூரிகள் எவை என்பது குறித்த வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட மறுப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் குமார், தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு தலைவரின் புகார்  உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தரமற்றதாக அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் தற்போது பயின்று கொண்டிருக்கும் மாண வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றவர், துணைவேந்தரிடம் கலந்தாலோசித்து, கல்லூரிகளின் பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.