புதுடெல்லி: பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்குவது குறித்த ஒரு தெளிவான திட்ட வரையறை டெல்லி அரசிடம் இல்லை என மத்திய நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், தனது வாக்குறுதியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது டெல்லி அரசு. இதன்மூலம், இந்த இலவசப் பயண திட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதீய ஜனதா இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இந்த இலவசப் பயணத் திட்டம் பாரபட்சமானது மற்றும் சாத்தியமற்றது என்று செலவினம் மற்றும் போக்குவரத்து சாதனங்களைக் காரணம் காட்டி ஒரு சாரார் விமர்சிக்கின்றனர்.
“இலவசப் போக்குவரத்து என்றால், முதலில் தேவையான அளவிற்கு பேருந்துகள் இருக்க வேண்டும். இதுவரை எத்தனைப் பேருந்துகளை அவர்கள் தயார் செய்துள்ளார்கள்? இதுதொடர்பாக சில நாட்களில் நான் பத்திரிகையாளர்களை சந்திப்பேன்.
டெல்லி அரசு இந்த இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக இதுவரை மத்திய அரசுக்கோ, டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திற்கோ எந்தவித செயல்திட்டத்தையும் வழங்கவில்லை. மாநில அரசு ஏற்கனவே கடனில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஸ்வாச் பாரத் அல்லது ஆயூஷ்மான் பாரத் திட்டங்களுக்கு எதையும் டெல்லி அரசு செலவழிக்கவில்லை. எங்களுக்கு வாக்களித்தப் பெண்களுக்கு நாங்கள் எப்போதும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்” என்றார்.
தற்போது பேருந்துகளில் பயணம் செய்வோரில், சுமார் 30% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருங்கிவரும் டெல்லி சட்டசபைத் தேர்தலில் வாக்குகளைக் கவருவதற்கு இந்த திட்ட அறிவிப்பு பெரிய பலனைக் கொடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.