மும்பை: இந்தியப் பருவமழை காலம், தெற்கு கடற்கரை வழியாக ஜுன் 8ம் தேதி இந்தியாவிற்குள் நுழையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

வேளாண்மையை பிரதானமாக நம்பியிருக்கும் நாட்டில், ஆண்டுதோறும் வரும் இந்த 4 மாத பருவமழை காலம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வழக்கமாக இந்தியாவின் பருவமழை ஜுன் மாத தொடக்கத்தில் கேரளாவில் தொடங்கி, செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் பின்வாங்கும். ஏற்கனவே, கேரளாவில் ஒருசில நாட்கள் தாமதமாக ஜுன் 6ம் தேதி பருவமழை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கோடிக்கணக்கான இந்தியர்கள் தாமதமாகும் பருவமழையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வாட்டி வதக்கிய வெப்பத்தினால், அவர்களால் தங்களின் நீர்நிலைகளின் தண்ணீரை அதிக காலம் சேமிக்க முடியாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.