புதுடெல்லி: கடற்படை சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பல்வேறு நிலைகளிலான அதிகாரிகளுக்கிடையே ஒரேவிதமான உணவு மற்றும் பானங்கள் பரிமாறப்பட்டு, வேறுபாடுகளை குறைக்கும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்படையின் புதிய தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்றுள்ள நிலையில் இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், அத்தகைய நிகழ்ச்சிகளில் தலைமை கடற்படை தளபதிக்காக பலவிதமான கார்களை நிறுத்திவைக்கும் வழக்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகளின் மூலம் கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நிலவும் கண்ணியக்குறைவான வேறுபாடுகளை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், பலவிதமான பணி நிலைகளுக்கிடையில் சமத்துவத்தைக் கொண்டுவர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, பெரிய நிலையிலான அதிகாரிகளுக்கு பூங்கொத்து கொடுக்கும் வழக்கமும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.