டில்லி
இந்தியாவில் இவ்வருடம் கோடை மழை 65 வருடங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்வது வழக்கமாகும். தென் இந்தியாவில் இதை கோடை மழை என கூறுவார்கள். இது மாங்காய் பருவம் என்பதால் வட இந்தியாவில் மாங்காய் மழை என அழைப்பது வழக்கமாகும்.
இது குறித்து தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் கோடை மழை கடந்த 65 ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவில் பெய்துள்ளது. நாடெங்கும் பெய்யும் கோடை மழையில் சராசரியாக 25 சதவிகிதம் மட்டுமே பெய்துள்ளது. இதில் வடமேற்கு இந்தியாவில் 30%, மத்திய இந்தியாவில் 18%, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 47% மற்றும் தென் தீபகற்ப பகுதியில் 14% மட்டுமே மழை பெய்துள்ளது.
இந்த மழை இமாசல பிரதேசத்தில் ஆப்பிள் விளைச்சலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். அத்துடன் இந்த மழையின் மூலம் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் அபாயமும் குறையும். ஆனால் இம்முறை மிகவும் குறைந்துள்ள கோடைமழையால் நாடெங்கும் வெப்பம் அதிகரித்துள்ளது.