நியுயார்க்

பிரபல கோடிஸ்வரரான வாரன் பஃபெட் உடன் விருந்து உண்ண ஏலத்தின் மூலம் ஒரு நபர் 45 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த உள்ளார்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான வாரன் பஃபெட் ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த மாபெரும் கொடையாளர் ஆவார்.   இவர் பெர்க்‌ஷையர் ஹாத்வே என்னும் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளர் ஆவார்.   அந்நிறுவனத்தின் தலைவரான இவர் சொத்தின் மதிப்பு 62 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.  இது இந்திய மதிப்பில் ரூ. 450,173 கோடி ஆகும்.

வாரன் தனது  வாழ்நாளுக்கு பிறகு தனது சொத்துக்களில் பெரும் பங்கை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிக்க உள்ளார்.  இவர் ஒவ்வொரு வருடமும் தன்னோடு விருந்துண்ண அழைப்பு விடுத்து அதற்கான கட்டணத்தை ஏலம் மூலம் முடிவு செய்கிறார்.  இவ்வாறு ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்

இந்த வருடத்துக்கான ஏலம் இணைய தளம் மூலம் 5 நாட்கள் நடந்தன.   அதில் பெயர் தெரிவிக்காத ஒருவர் அதிகப்படியாக 45 லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில்  31.16 கோடி ஏலம் கேட்டுள்ளார்.   இந்த ஏலத்தின் மூலம் வாரன் மிகவும் மகிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர் வாரன் பஃபெட் உடன் விருந்துண்ண வரும் போது 7 நண்பர்களையும் அழைத்து வரலாம்.    இந்த வருடம் மொத்தம் 5 பேர் 18 முறை ஏலம் கோரி உள்ளனர்.  ஏலத்தில் வெற்றி எற்றவர் தனது பெயரை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.