சென்னை:
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றி பெறாத நிலையில், அதிமுக அமைச்சர் பதவி கேட்பது நியாயம் இல்லை என்று தமிழக முன்னாள் பாஜக தலைவரும், மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி யில் பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் இணைந்து 38 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அதிமுக மட்டும் ஒரு தொகுதி யில் வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள 37 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
இது அதிமுக மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கு காரணம் அதிமுக அரசுதான் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்காது, அதிமுகவுக்கு அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன், தமிழகத்தில் பாஜக 5 தொகுதி களில் போட்டியிட்டும் ஒரு வேட்பாளரை கூட வெற்றிபெற செய்யாமல், மத்திய அமைச்சரவை யில் அதிமுகவுக்கு இடம் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது பொருத்தமாக இருக்காது என்று கூறினார்.
மேலும், தமிழகத்துக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும், உரிய நேரத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும், தற்போது அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவை முழுமையானது அல்ல என்றும் அதிமுகவுக்கு ஆறுதல் கூறினார்.