மக்களவையில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி எச்.வசந்தகுமார், “நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 3 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளேன். மேலும் தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்புகள், தொகுதிக்கு தேவையானவற்றை தொடர்ந்து செய்து கொடுப்பேன்.
கன்னியாகுமரி தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசும்போது, நாங்குநேரி தொகுதி மக்களின் பிரச்சினை குறித்தும் குரல் கொடுப்போம். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். குமரி மற்றும் நெல்லையை சிறந்த சுற்றுலா தலமாக்க முயற்சி மேற்கொள்வேன். குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது.
இதுகுறித்து மீனவர்களிடமும், தமிழக அரசிடமும் பேசி முடிவு செய்யப்படும். கடல் அரிப்பை தடுக்க கூடுதல் தூண்டில் வளைவு அமைக்கப்படும். எனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மீனவர் நலனுக்காக ஒதுக்கப்படும். செயல்படாமல் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருளாதார திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன். ரூ.150 கோடியில் பாளையில் விளையாட்டு கிராமம் அமைக்கும் திட்டம் காலதாமதம் ஆகிறது. இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்துவேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை செய்து விட்டு தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். எனினும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள். குமரி தொகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓட்டுகள் விடுபட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனாலும் நாங்கள் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம். மக்களின் குரலாக பாராளு மன்றத்தில் ஒலிப்போம். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தவர் குமரி அனந்தன். குமரி மாவட்ட ரெயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். அல்லது நெல்லையை தனி கோட்டமாக்கி அதனுடன் இணைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.