டில்லி

ரண்டாம் விமான நிலையம் அமைக்க தேவையான இடத்தை அடையாளம் காட்ட வேண்டுமென மாநில அரசுகளுக்கு விமானநிலையம் அதிகார ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாடெங்கும் விமான நிலைய விரிவாக்கம் தேவைப்படுகிறது. ஆனால் பல இடங்களில் அதற்கான நிலங்களை கையகப்படுத்த இயலாத நிலை உள்ளது. இதற்காக பல பெரிய நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விமான நிலைய அதிகார ஆணையம் தீர்மானம் செய்துள்ளது. ஏற்கனவே இதற்கான பணிகளை தொடங்க ஆணையம் தயாராக உள்ளது.

இன்று மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடி நாட்டின் உள்கட்டமைப்புகளை அதிகமாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கிணங்க விமான நிலைய அதிகார ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டம் தீட்டி உள்ளது. இது குறித்து ஆணைய தலைவர் குருபிரசாத் மகோபாத்ரா, “பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களுக்கும் இரண்டாவது விமான நிலையத்தின் தேவைகள் உள்ளன.

ஏற்கனவே டில்லி, மும்பை மற்றும் கோவா விமானநிலையங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன மற்ற நகரங்களிலும் இந்த பணியை தொடங்க வசதியாக இதற்கான நிலங்களை அடையாளம் கண்டு தெரிவிக்க வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம். இவற்றில் முக்கியமாக விசாகபட்டிணம், ஜைபூர், புனே, அகமதாபாத், ராஜ்கோட், பாட்னா, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் இடப் பற்றாக்குறை அதிகம் உள்ளது.

அகமதாபாத் நகரில் அடுத்ததாக இரண்டாம் விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. புவனேஸ்வர் மற்றும் சென்னை இரண்டாம் விமான நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்க உள்ளன. இந்த பணிகள் முடிந்த உடன் இவ்விரு இடங்களிலும் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை தொடங்க உள்ளோம்.“ என தெரிவித்துள்ளார்.