டில்லி:
அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி, கனிமொழி ஆகியோர், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் ராஜ்யசபா எம்.பி.பதவி இழந்துள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த நிலையில், அவர் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அதுபோல ரவிசங்கர் பிரசாத் பீகாரிலும், ஸ்மிரிதி இரானி உ.பி. மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அத்துடன் திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர்கள் மாநிலங்களவை எம்.பி. பதவிகள் இழந்ததாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் மூவரும் மக்களவை எம்.பி.க்களாகவே கருதப்படுவர் என்றும், மாநிலங்களவை செயலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அதிமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும், திமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதில் அதிமுக கட்சி மக்களவை தேர்தலின் போது கூட்டணி அமைத்த பாமகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன் படி தருமபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அதிக வாய்ப்பு. மீதமுள்ள இரு ராஜ்யசபா சீட்டுகளில் ஒரு பதவி மைத்ரேயனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்றொரு பதவி கே.பி.முனு சாமிக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.