சென்னை:

சைதாப்பேட்டை அருகே கோட்டூர்புரம் அருகே காவல்துறையினர் இரவு நேரம் வாகன சோதனை நடத்தியபோது, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காவல்துறை யினரை கண்டதும் திரும்பி செல்ல முயன்றபோது,  சந்தேகம் அடைந்த காவல்துறையினர்  அந்த வாலிபரை மடக்க முயற்சித்தனர். அப்போது,   அவர் தான்  வைத்திருந்த பைகளை  தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றார்.

அந்த பைகளை  ஆய்வு செய்த போலீசார், அதனுள் ரூ.1 கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கட்டு கட்டாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவத்தன்று இரவு   கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமு தலைமையில் காவலர் சக்திவேல், ஊர் காவல்படையை சேர்ந்த அண்ணாசாமி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோட்டூர்புரம் வரதாபுரம் லாக் தெரு அருகே உதவி ஆய்வாளர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் பைக்குடன் திரும்பி செல்ல முயன்றார்.

இதை பார்த்த போலீசார் பைக்கில் வந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். போலீசாரும் சிறிது தூரம் விரட்டி சென்றனர். அப்போது பைக்கில் எடுத்து வந்த 3 பைகளையும் சாலையிலேயே வீசிவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அதை திறந்து பார்த்தபோது,  பை முழுவதும் ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 3 பைகளில் இருந்த மொத்த  பணத்தை எண்ணி பார்த்த போது அதில், 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அநத பணம், சமீபத்தில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில்,  வாகன சோதனையில் சிக்கிய பணம், பிரபல நிறுவனத்தின் இயக்குநருக்கு  சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. பாலசுப்ரமணியம் ஹைதராபாத்திற்கு சென்றிருந்த போது, வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில், வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.