மும்பை
பாலிவுட் நடிகை பாயல் ரோகத்கி உடன்கட்டை ஏறுவதை ஆதரித்தும் அதை தடை செய்த ராஜா ராம் மோகன் ராயை தாக்கியும் டிவிட்டரில் பதிந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
வடநாட்டில் சதி என அழைக்கப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. கணவன் இறந்த பிறகு அவர் மனைவி அவரை எரிக்கும் அதே சிதையில் உயிருடன் எரிக்கப்படுவதே உடன் கட்டை ஏறுவதாகும். சமூக சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராய் இந்த வழக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். அவருடைய கடும் போராட்டத்தினால் இந்த கொடுமையான வழக்கம் சட்ட விரோதமாக்கப்பட்டது
பாலிவுட் நடிகையான பாயல் ரோகத்கி பல முறை பரபரப்பை கிளப்பி உள்ளார். கடந்த 2017 ஆம் வருடம் தனக்கு வாய்ப்பளிக்க பல பாலிவுட் பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் முத்தலாக் பற்றி கூறிய கருத்துக்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவருடைய டிவிட்டர் பதிவு மற்றொரு சர்ச்சையை தொடங்கி உள்ளது.
பாயல் தனது டிவிட்டரில் ”சதி நடவடிக்கைக்கு பின் உள்ள உண்மை” என்னும் வீடியோவை பகிர்ந்தார். அத்துடன் ”முகலாய மன்னன் அலாவுதின் கில்ஜி சித்தூர் அரசி பத்மாவதியை சிறை பிடிக்க வந்த போது அவர் நெருப்பில் இறங்கி தன்னை மாய்த்துக் கொண்டார். இதுவே சதியின் வரலாறு ஆகும். ஆனால் ராஜா ராம் மோகன் ராய் போன்ற துரோகிகள் உதவியுடன் பிரிட்டிஷ்காரர்கள் இதை கொடுமையான பழக்கமாக அறிவித்தனர்” என பதிந்தார்.
https://twitter.com/Payal_Rohatgi/status/1132656909780160515
அவர் இவ்வாறு ராஜா ராம்மோகன் ராயை துரோகி என விமர்சித்தற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் ஒரு சமூக சீர்திருத்த வாதி மற்றும் பிரம்ம சமாஜ் தலைவர் எனவும் அவரை பற்றி பாயலுக்கு ஒன்றும் தெரியவில்லை எனவும் பின்னூட்டங்கள் குவிந்தன. அதற்கு பாயல் அவர் சமூக சீர்திருத்தவாதியாக இருந்ததை விட பிரிட்டிஷாருக்கு ஜாலரா அடிப்பதையே அதிகம் செய்து வந்தார் என பதில் அளித்தார்.
இதை ஒட்டி மேலும் பலர் அவரை கடுமையாக தாக்கி பின்னூட்டம் இட்டுள்ளனர். பூகி என்பவர், “நேபாள நாடு எப்போதுமே பிரிட்டிஷ் மற்றும் முகலாயர்களால் பிடிக்கபடவிலை. அந்த நாட்டிலும் 1920 வரை சதி வழக்கம் இருந்தது. ஆனால் அது கொடூரமானது என்பதால் அதை அந்நாடு தடை செய்துள்ளது” என பதிந்துள்ளார்.
நெட்டிசன்கள் ”பாயலுக்கு பித்து பிடித்து விட்டது. அவருக்கு புகழ் தேவைப்படுகிறது. திரையில் நடிப்பதை விட இங்கு நன்கு நடிக்கிறார்,” எனவும், ”வேத காலத்தில் சதி வழக்கம் கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால் அதன் பிறகு கட்டாயப்படுத்தப்பட்டது.” எனவும் மற்றொருவர், “நல்ல ஆராய்ச்சி. விரைவில் உங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும்” எனவும் பதிந்துள்ளனர்/