கோவை:
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்ரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் 5முனை போட்டி நிலவி வருகிறது.
சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மீண்டும் உறுதி அளித்தார்.
ஏற்கனவே பலமுறை ஸ்டாலின் ஜெ.மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், தற்போதைய ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளியாக வாய்ப்பில்லை. எனவே உண்மை வெளி வரவேண்டுமெனில் சி.பி.ஐ., விசாரணை தேவை என்று கூறி வந்த நிலையில், தற்போது சூலூரில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.