சென்னை:

மிழ்மாநில காங்கிரஸ் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக பொய்யான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு,  சென்னையில்,  தமாகா இளைஞர் அணி சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, ஜி.கே.வாசனின் தமாகா அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தற்போது தனிப்பட்ட விசயமாக ஜி.கே.வாசன் டில்லி சென்றுள்ளார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினமலர் செய்தி பத்திரிகை, டில்லியில் முகாமிட்டுள்ள ஜி.கே. வாசன் தமாகாவை பாஜகவுடன் இணைக்க பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியிட்டது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வாசன் மற்றும் தமாகா தொண்டர்கள் காங்கிரஸ் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமை யில், த.மா.கா தொண்டர்கள் பொய்ச் செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையை கண்டித்து, தினமலர் அலுவலகம் முன்பு  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யுவராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் உண்மையான தொண்டர்கள் தமிழ் மாநில காங்கிரஸில் உள்ளனர் என்றும்  கூறினார்.