விசாகப்பட்டினம்:
தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு இது 100வது வெற்றி. அதுபோல டெல்லி அணிக்கு இது 100வது தோல்வி. அதே நேரத்தில் 8வது முறையாக பைனலிலும் நுழைந்துள்ளது.
இன்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் டுபிளசிஸ் மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தனர்.
ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்றுப்போட்டி இன்று விசாகப்பட்டினம் ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து டெல்லி அணி மட்டையுடன் களமிறங்கியது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 5 ரன்கள் எடுத்த நிலையில் 3 வது ஓவரில் தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். ஷிகார் தவான் 18 ரன்களில் ஹர்பஜன் சிங் பந்தில் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணியில் கொலின் மன்ரோ 27, ஷிரேயாஸ் அய்யர் 13, ரிஷாப் பந்த் 38, ஆக்ஸர் படேல் 3ரூதர்போர்ட் 10, கீமோ பால் 6, அமித் மிஸ்ரா 6, ட்ரென்ட் போல்ட் 6, இஷாந்த் சர்மா 10 ரன்கள் என 9 விக்கெட்டை இழந்தது டெல்லி அணி 147 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணியில் தீபக் சஹார் , ஹர்பஜன் சிங், ஜடேஜா , பிராவோ தலா 2 விக்கெட்டையும் இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து சென்னை அணி 148 ரன்களை இலக்காக கொண்டு விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளசிஸ் மற்றும் வாட்சனும் களமிறங்கினர். ஆட்டத்தில் தொடக்கத்தில் இருவரும் சிறிது நேரம் தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே பக்கத்தில் நின்றதால் விக்கெட்டுக்கள் பறி போய்விடும் என பரபரப்பு நிலவியது. ஆனால் பின்னர் சுதாரித்துக்கொண்ட இருவரும் தொடர்ந்து நின்று ஆடத்தொடங்கினர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி 10.2 ஓவரில் போல்டின் பந்தில் கீமோவிடம் கேட்ச் கொடுத்து டுபிளசிஸ் அவுட் ஆனார். அவர் 39 பந்தில் 1 சிக்சர், 7 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணியின் நிதானமான ஆட்டம் வெற்றியை தொடக்கத்திலே உறுதி செய்த நிலையில், அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 108 ரன்னாக இருக்கும்போது, வாட்சன் மிஸ்ரா பந்தில் போல்டிடம் கேட்ச் கொடுத்தார். அவர், 32 பந்தில் 4 சிக்சர் உடன் 3 பவுண்டரிகள் அடித்து 50 ரன்கள் எடுத்திருந்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய டுபிளசிஸ் மற்றும் வாட்சன் இருவரும் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது.
இருந்தாலும் ஆட்டம் சிறப்பாக இருந்தால், ரசிகர்கள் உற்சாகமாகவே விசில் அடித்து மகிழ்ச்சியை தெரிவித்து வந்தனர். அடுத்து இறங்கிய ராயுடு தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நிலை யில் 15.6வது ஓவரில் அணியின் ஸ்கோர் 127 இருந்த நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 11 ரன்னில் அசார் பந்தில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் தோனி பலத்த கோஷத்துடன் களமிறங்கினார்.
தோனி, ராயுடு இணை சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வந்தனர். 18.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 146 இருந்தபோது இஷாந்த் சர்மா பந்து வீச்சில் கீமோவிடம் கேட்ச் கொடுத்து தோனி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தோனி 9 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்தார். அதையடுத்து கடைசி 1.2 ஓவர் (8 பந்துகள்) இருந்த நிலையில் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நேரத்தில் பிராவோ களத்தில் புகுந்தார். 18.5வது ஓவரில் ராயுடு ஒரு ரன் எடுக்க, 19வது ஓவரின் கடைசி பந்தை பிராவோ பவுண்டரிக்கு விரட்டினார்.
இதன் காரணமாக சிஎஸ்கே அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆட்ட நாயகனாக டுபிளசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டி சிஎஸ்கே அணிக்கும்மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் வரும் 12ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி பெற்று புள்ளி போட்டியில் முதலிடம் பிடித்த மும்பை அணி இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என்பதில் வியப்பேதும் இல்லை.