சென்னை:

போலி கிரெடிட் கார்டுகளை வைத்திருந்ததாக  2 வெளிநாட்டினர் சென்னையில் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம்  இருந்து ஏராளமான கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல்கேரிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையின் பல இடங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறை வாடகைக்கு எடுத்து தங்கி படித்தும், பணியாற்றியும் வருகின்றனர். அதுபோல சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்க நல்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏராளமான கிரிடிட் கார்டுகளும், சில கருவிகளும் இருப்பதாக போலீசாருக்கு ரகசியல் வந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் வெலிகோவ் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.  அவரிடம் இருந்து ஏராளமான  போலி கிரிடிட் கார்டுகள் கைப்பற்றப் பட்டன. அவரிடும் நடத்திய தொடர் விசாரணையை அடுத்து, அதே பகுதியில் வேறொரு விடுதியில் தங்கியிருந்த லியான் மார்கோவ் என்ற நபரும் பிடிபட்டார்.

இவர்களிடம் இருந்து ஏராளமான சர்வதேச கிரெடிட் கார்டுகள், 10 லட்சம் ரூபாய் பணம், 4 ஆயிரத்து 700 யூரோ கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்,  ஏடிஎம் எந்திரங்களில் பொருத்தி வாடிக்கையாளர் கார்டு விவரங்களை சேகரிக்கும் டிகோடர் கருவி, நூற்றுக் கணக்கான வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள்,  பென்டிரைவ்களும் மற்றும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சர்வதேச கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் வங்கி விவரங்களைத் திருடி அவற்றின் மூலம் போலி கார்டுகளை தயாரித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அந்தக் கார்டுகளை வைத்து ஏற்கெனவே மும்பையில் அவர்கள் பண வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது. தற்போது சென்னையிலும் தங்கி இருந்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.