சென்னை:
தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
ரயில் பெட்டியில் நடைபெறும் முறைகேடுகள், பாலியன் தொல்லைகள், கொள்ளை மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் ரயில்கள், பஸ்களில் சிசிடிவி காமிரா பொருத்தி கண்காணிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டு உளளது.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டே மும்பை, டில்லி போன்ற நகரங்களின் புறநகர் ரயில்களில், பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ரயில் பெட்டிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
‘நிர்பயா’ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து, 700 கோடி ரூபாயை, இதற்காக செலவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை ரயில் கோட்டத்தில் 4 மின்சார ரயில்கள், சிசிடிவி கேமரா உட்பட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரயில்களில் பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற பெட்டிகளில் உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, மின் விசிறிகள், இருக்கைகள், ஜன்னல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வசதிகள் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.