பெங்களூரு: ஓலா மற்றும் உபேர் ஓட்டுநர்கள், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையான காலகட்டத்தில், பெங்களூரின் மைய வணிகப் பகுதிகளில், பெண்களை ஏற்றிச் செல்லமாட்டார்கள் என்று பரவிய தகவலை, ஓட்டுநர் சங்கம் மறுத்துள்ளது.
இப்படியான ஒரு சவாரியின்போது, ஒரு ஓட்டுநரை பெண் பயணிகள் சிலர் தாக்கினார்கள் என்று பரவிய செய்தியை அடுத்து, ஓட்டுநர் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
ஆனால், அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனவும், பயணிகளுடன் வாய் தகராறுகள் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கைதான் என்றும், சமீபத்திய தகராறு குறித்து வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்றும் ஓட்டுநர் சங்கம் சார்பில் கூறப்படுகிறது.
எனவே, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாமென்றும், எல்லா நேரத்திலும், பெண்களுக்கு சேவைகள் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.