சென்னை:

திமுக அதிருப்தி எம்எல்ஏ கள்ளக்குறிச்சிபிரபு, சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி மனு கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை என்று சட்டப்பேரவை செயலாளர் பதில் அளித்துள்ளார்.

அதிமுகவை சேர்ந்த  எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக  அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக் கொறடா ராஜேந்திரன், சபாநாயர் தனபாலிடம் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட  மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கு மாறு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதை எதிர்த்து ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர்.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், 4 வாரத்தில் பதிலளிக்குமாறு சட்டப்பேரவை செயலருக்கு உத்தர விட்டனர்.

இந்த நிலையில்,சபாநாயகர் அளித்த அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கூடுதல் அவகாசம் கோரி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் மனு அளித்துள்ளார். எம்எல்ஏ பிரபு சார்பில் அவரது வழக்கறிஞர் சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த தடை தனக்கும் பொருந்தும் என நம்புவதாகவும், ஒருவேளை அந்த தடை தனக்கு பொருந்தாவிட்டால் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும், பிரபு கூறியுள்ளார். அப்படி விளக்கம் அளிப்பதற்கு மேலும் ஒரு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் மனுவில் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும் பொருந்தும் என்றும், அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.