லக்னோ
உத்திரப் பிரதேச மாநில பாஜக அரசில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி விலகி உள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சராக பணி புரிந்து வருகிறார். கடந்த 2017 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலில் இவரது கட்சிக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.
ராஜ்பர் தொடர்ந்து பாஜக குறித்தும் யோகி ஆதித்யநாத் ஆட்சியை குறித்தும் பல விமர்சனங்களை எழுப்பி வருகிறார். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கடந்த மாதம் ராஜ்பர் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அத்துடன் 39 தொகுடிகளுக்கான தனது கட்சி வேபாளரையும் அறிவித்தார். பாஜக தனக்கு தேர்தல் வாய்ப்பு ளிக்காததால் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கட்சி தனித்து போட்டியிடவில்லை.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிரகாஷ் ராஜ்பர், “நான் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியில் இருந்து கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். நான் எனது அமைச்சர்பதவியை அன்றே ராஜினாமா செய்து விட்டேன். ஆனால் அதற்கு பாஜக இன்னும் ஒப்புதல் தரவில்லை. எனக்கும் இந்த அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஆனால் எனது கட்சியின் பெயரை பாஜக பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு சாலை பேரணியை நடத்தினார். அதில் பாஜக என் அனுமதி இல்லாமலேயே எனது புகைப்படங்களை பயன்படுத்தி இருக்கிறது இதை எதிர்த்து நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்.” என தெரிவித்தார்.
இவரது இனத்தவர் உத்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு பகுதியில் 20% க்கும் மேல் உள்ளனர். மக்களவை தேர்தலில் ஆறாம் மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள தொகுதிகளில் நடக்க உள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து ராஜ்பர் விலகி உள்ளது பாஜகவுக்கு கடும் பின்னணியை அளிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.