கோவை:
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் சாவுக்கு காரணம் வருமான வரி அதிகாரிகள் என்று, மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான தமிழகம் உள்பட நாடு முழுவதும் சுமார் 70 இடங்களில் கடந்த 30ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களிலும், மேலும் அவருக்கு சொந்தமான ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாக தகவல் வெளியானது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரியில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, கல்லூரியின் கேசியர் பழனி என்பவரிடம் வருமான வரித்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, கேசியர் பழனி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பழனியின் உடல் வெள்ளியங்காடு மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே உள்ள குட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியது. பழனியை யாரும் கடத்திச்சென்று கொலை செய்தனரா, அல்லது தற்கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திய மன உளைச்சலால் பழனிசாமி இறந்ததாக மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கேஷியர் பழனிசாமி மரணம் குறித்து தெரிவித்த போது எனது கணவர் மிகுந்த மனவருத்தம் அடைந்தார்; அவரது குடும்பத்தினருக்கு அனைத்துவிதத்திலும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிர்வாக அலுவலக காசாளர் பழனிசாமி மரணத்தில் விரிவான விசாரணை தேவை; அனைத்து கோணங்களிலும் விசாரித்து மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறி உள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியான லீமாரோஸ், ஐஜேகே கட்சியின் மகளிரின் அணி நிர்வாகியாகவும், ஹோமியோபதி கல்லூரியின் தாளாளருமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.