சென்னை:
எனக்கு சொந்தமான இடங்களில் இருந்து தங்கம், மற்றும் கோடிக்கணக்கான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதலமைச்சர் நிரூபித்தால் பதவி விலக தயார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
கடநத் மார்ச் மாதம் 30ம் தேதி வேலுர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தை துரை முருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின்போது, 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் காட்பாடி யில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் ஒருவரின் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அங்கு கைப்பற்றிய பணமானது வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு கவரில் போடப்பட்டிருந்தநிலையில் கைப்பற்றப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மற்ற கட்சித்தலைவர்களை அவ்வப் போது மிமிக்ரி செய்து நக்கல்செய்து வந்த துரைமுருகனின் முகத்தில் கரியை பூசிய நிகழ்வாக அமைந்தது. அவரது செயல் குறித்து மாற்றுக்கட்சி கட்சித்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துரைமுருகன் வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம், ரூ 13 கோடி கைப்பற்றப்பட்டதாக தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், எனக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், ரூ 13 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதலமைச்சர் நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என்று சவால் விடுத்துள்ளார்.