சென்னை:
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போதே வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரியை தொட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பானி புயல் காரணமாக வெயில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்த்துபோன நிலையில், வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சா வூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி யுள்ளது. வேலூரில் நேற்று 111.5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. இதனால், பெரும்பாலான பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.