டில்லி:

டிசாவை இன்று தாக்கும் ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

அதிதீவிர புயலாக மாறி உள்ள ஃபானி புயல் இன்று பகல் 11 மணி முதல் 2 மணி வரை ஒடிசாவை சூறையாடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 200 கிமீ வேகத்தில் காற்றுடன் மழையும் சேர்ந்து இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கடற்கரையோர பகுதி மக்கள் உள்பட பாதிக்கப்படும் என கருதப்படும்  மாநிலத்தை சேர்ந்த சுமார்  8 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இன்று பிற்பகலில் ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே ‘பானி’ புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக கடலோர ஆந்திர விசாகப் பட்டினம், விஜயநகரம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முதல் சூறைக்காற்றுடன்  பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு சிறப்பு படையினர் ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முழுமையான உபகரணங்களைக் கொண்டுள்ள 28 குழுக்கள் பூரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக படகுகள், செயற்கை கோள் தொலைபேசிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மரம் வெட்டும் சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளனர்.

இந்தக் குழுக்களில் டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், என்ஜினீயர்கள், முக்குளிப்போர் (டைவர்கள்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

‘பானி’ புயலை எதிர்கொள்வது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு உயர் மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர், உள்துறை செயலாளர், வானிலை ஆராய்ச்சி துறை, தேசிய பேரிடர் மீட்பு அதிரடிப்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புயலை சந்திப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் சுருக்கமாக எடுத்துரைத்தனர். ‘பானி’ புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிற ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுமாறு மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதே போன்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

‘பானி’ புயல் காரணமாக 2 நாட்களில் 89 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே துறை கூறுகிறது. நேற்று ஒரே நாளில் 81 ரெயில்கள் ரத்து ஆகின. ஹவுரா-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி-புவனேசுவரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் அடங்கும்.

மேலும் கடலோர விமான நிலையங்கள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதை சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபு, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.