திஸ்பூர்:

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 27 மாதங்கள் ஊதியம் தராததால், இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு மத்திய அரசே காரணம் என்றும் அவர் குறிப்பு எழுதிவைத்துள்ளார்.


அசாம் மாநிலத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் பேப்பர் கழகத்தின் நாகாவ் மில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாகும்.

இந்த மில்லை மூடியதால், கடந்த 27 மாதங்கள் ஊதியம் இன்றி இருந்திருக்கிறார் முஜாம்தார் என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர்.

இவரது மனைவி கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
இவரது ஒரு மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிக்கிறார். மற்றொரு மகள் கேரளாவில் படிக்கிறார்.

ஊதியம் இல்லாததால் கடனாளியான முஜாம்தார், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி, தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நான் செல்கிறேன்..எனது மரணத்துக்கு மத்திய அரசே காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது, அவரது உடல் அழுகிக் கிடந்தது.
போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்து உடலை கைப்பற்றினர்.

நாகாவ் பேப்பர் மில்லின் தொழிற்சங்கத் தலைவர் ஹேமந்தா கக்காட்டி கூறும்போது, கடந்த ஆண்டு 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இங்கு பணியாற்றிய 3 ஆயிரம் தொழிலாளர்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் பெரும்பாலோர் ஒரு வேளை மட்டுமே உண்கின்றனர் என்றார்.

இந்திய பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக பாஜக அரசு தவறாக கூறுவதற்கு இதுவே சாட்சி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.