அகமதாபாத்: புலவாமா தாக்குதல் என்பதும், கோத்ரா ரயில் எரிப்பைப் போன்று பாரதீய ஜனதாவால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு வன்முறைதான் என்று குற்றம்சாட்டியுள்ளார் குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா.
தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வகேலா கூறியுள்ளதாவது, “புலவாமா தாக்குதலுக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தை ஏற்றிவந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டில் குஜராத் மாநிலத்தைக் குறிக்கும் GJ என்பது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதம் என்பதை தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துகிறது பாரதீய ஜனதா. அவர்களின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலில் எந்த தீவிரவாதியும் இறந்ததாக, ஒரு சர்வதேச மீடியாவும் உறுதிப்படுத்தவில்லை.
பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் இருப்பது முன்பே உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், அங்கே தாக்குதல் நடத்துவதற்கு, புலவாமா சம்பவத்தைப் போன்று ஒரு காரணம் இருக்க வேண்டுமா என்ன? புலவாமா தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அனைத்தும் அலட்சியம் செய்யப்பட்டன.
எனவே, ஒட்டுமொத்த விஷயத்திலும் பாரதீய ஜனதாவின் பங்கு இருக்கிறது. அவர்களின் குஜராத் மாடல் என்பது தோல்வியடைந்த ஒன்று. மாநில மக்கள் தற்போது கஷ்டத்தில் இருக்கிறார்கள். மாநிலத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், அவர்களுக்கு மோசமான முடிவு காத்திருக்கிறது” என்றார்.