டில்லி

ம் ஆத்மி கட்சியின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயலுவதாக டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில்  எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.    பிரதமர் மோடி சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் மேற்கு வங்கத்தை ஆளும், திருணாமுல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40 பேர் தம்முடன் தொடர்பில் உள்ளதாகவும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மோடியின் இந்த கருத்து மக்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கியது.   ஒரு பிரதமரே இவ்வாறு குதிரைப்பேரம் நடத்தியதாக பெருமை அடித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி உள்ளனர்.    மோடியின் இந்த பேச்சு பாஜக ஆட்சி புரியாத அனைத்து மாநில அரசுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில்  ஒருவரும் அம்மாநில துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா, “எதிர்க்கட்சி ஆளும் ஒரு மாநிலத்தின் 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வசம் உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.   இது அவர் பதவிக்கு அழகில்லை.     ஒரு பிரதமர் இவ்வாறான கருத்துக்களை கூறக்கூடாது.

பாஜக இதையே டில்லியிலும் செய்து வருகிறது.    ஆம் ஆத்மி கட்சியின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயன்று வருகிறது.   இதற்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ. 10 லட்சம் பணம் அளிப்பதாக அக்கட்சி பேரம் பேசி உள்ளது.   தற்போதுள்ள நிலையில் பாஜக தோல்வி அடையும் என்பது தெரிந்து விட்டதால் அந்த கட்சி இவ்வாறான வேலைகளை செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இதை பாஜக மறுத்துள்ளது.   பாஜகவின் ஊடக தலைவர் அசோக் கோயல், “தற்போது ஆம் ஆத்மி தோல்வி பயத்தில் உள்ளது.  எனவே இது போன்ற பொய் புகார்களை எழுப்பி ஆதாயம் தேட முயல்கிறது.    முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது கட்சி உறுப்பினர்களிடையே மதிப்பில்லை என்பதால் இவ்வாறு அக்கட்சி குற்றம் சாட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.