சென்னை:

ன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக கூறி உள்ளது.

இளைஞர்கள் இளம்பெண்களை காதலிக்கும்படி வற்புறுத்துவதும், அவர்கள் காதலிக்க மறுத்தால் அவர்கள்மீது ஆசிட் வீசுவது, கொலை செய்து போன்ற நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வலியுறுத்திய நிலையில், அந்த இளம்பெண் மறுக்கவே, அவரை கத்தியால் குத்தினார் அந்த சைகோ இளைஞர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில், ஜாமின் கேட்ட  நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அந்த இளைஞருக்கு மனநல ஆலோசனை அளிக்கவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி,  தன்னை காதலிக்குமாறும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும்  எந்த ஒரு பெண்ணையும் வற்புறுத்தும் உரிமை, எந்த ஒரு ஆணுக்கும் இல்லை என்று கூறியவர், பெண் என்பவர் தனது விருப்பங்களுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற காரணம் என்றார்.

மேலும், பெண்கள்  மற்றவர்களுடன் பழகும் முறைகளே, அவர்களை மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவதாக தெரிவித்தவர், அதற்காக ஒரு பெண்ணை கத்தியால் குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறினார்.

இதுபோன்ற வழக்குகளில் அனுதாபம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.