மதுரை:

புதுச்சேரி அரசு தொடர்பான  ஆவணங்களை ஆளுநர் கேட்க உரிமை உள்ளதாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பு கூறியது.

புதுச்சேரி மாநிலத்தில், மாநில காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது. அரசின் மக்கள் நல நடவடிக்கைகளை ஆளுநர் தடுத்து வருவதால், அங்கு மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது.

இதற்கிடையில், மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில், ஆளுநர் கிரண்பேடி அரசின் ஆவணங்களை ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்தியஅரசு, மாநில அரசின் ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற உத்தரவிட்டது.

மத்தியஅரசின்  இந்த அறிவிப்பை எதிர்த்து,  புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.