சென்னை: ஓலா மற்றும் உபேர் போன்ற போக்குவரத்து நிறுவனங்களை தமிழக அரசு முறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
ராஜ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தாக்கல் செய்திருந்த மனுவில், “உபேர் மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தகுந்த அனுமதி இல்லை எனவும், அவர்கள் அறிவிக்கும் குறைந்த கட்டணத்தால், இதர ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது” என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், “மனுதாரரும், அவரைப்போன்ற பிறரும், குறிப்பிடும் நிறுவனங்களுக்கு ஈடாக குறைந்த கட்டணம் வசூலிக்க விரும்பினால் மட்டுமே இந்த மனுவை விசாரிக்க முடியும். அப்படி செய்தால், மக்கள் தாங்களாகவே ஆட்டோக்களில் பயணம் செய்ய முன்வருவார்கள்” என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.
“முன்பு கால் டாக்ஸி சேவை மட்டுமே செய்துவந்த அந்த நிறுவனங்கள், தற்போது ஆட்டோ சேவையையும் தொடங்கி, மிகவும் குறைந்த கட்டணத்திற்கு மக்களை ஈர்க்கின்றனர். இது அரசின் விதிமுறைகளுக்கே எதிரானது” என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.