டில்லி:
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வெர்மா, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் உறுதி செய்தார்.
சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இங்கு நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெர்மா கலந்துகொண்டார். அவர் 242.7 புள்ளிகள் பெற்று முதல் பதக்கமான தங்கப்பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடம் ரஷிய வீரர் ஆர்டம் செர்னோசோவ்க்கு கிடைத்தது. 240.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 3வதாக கொரிய வீரர் சியுங்வூ ஹான் 220 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அபிஷேக் வெர்மா, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்பை உறுதி செய்தார்.
மேலும், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி, திவ்யன்ஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர்.