சேலம்:

நாமக்கல் அருகே உள்ள ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைருது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் வெளியான தகவலை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகளை பேரம் பேசி விற்பனை செய்து வந்த விவகாரம் வெளிச்சதுக்க  வந்தது.

இது தொடர்பாக விருப்ப ஓய்வு பெற்ற  நர்ஸ் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன்  முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், ஈரோட்டில் பணிபுரியும் தனியார் மருத்துவமனை செவிலியரான பர்வீனுக்கு கொல்லிமலையில் பணிபுரியும் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனரான முருகேசனும் கைது செய்யப்பட்டனர்.

பர்வீனிடம்  நடைபெற்று வரும் விசாரணையை தொடர்ந்து, நாமக்கல்லில் ஒரு குழந்தையும், திருச்சியில் ஒரு குழந்தை, மதுரையில் இரண்டு குழந்தை உள்பட  4 குழந்தைகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.

அதுபோல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனிடம் மேற்கொண்ட விசாரணையில், கொல்லி மலையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்த பகுதியல் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. இதில் 20 குழந்தைகள் மிஸ்ஸானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குழந்தைகள் விற்பனை தொடர்பாக  திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மேலும் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பர்வீனையும், செல்வி, தமிழ்ச்செல்வி, கோமதி என்ற 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் மட்டும், பல குழந்தைகளுக்கு போலியான பெயர்களில் பிறப்பு சான்றிதழ்களை அமுதா வாங்கிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானதால், அதுகுறித்து விசாரிக்க மாவட்ட சுகாதாரத்துறை 12 குழுக்களை அமைத்துள்ளது

அதன்படி ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், பயிற்சி பெற்ற செவிலியர்கள், மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4 ஆயிரத்து 800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை இந்தக் குழுக்கள் சரிபார்த்து வருகின்றன.

கொல்லிமலையில் தலா ஒரு மருத்துவர் உள்ளிட்ட 5 பேரைக் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. அப்பகுதியில் அதிகளவில் வீடுகளிலேயே பிரசவம் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், அவ்வாறு பிறந்த குழந்தைகளின் விவரங்கள், முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், ஒரு குடும்பத்தில் 3 பேருக்கு மேல் பிறந்த குழந்தைகளின் விவரங்களை  இந்தக் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

கொல்லிமலையில் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி தலைமையில் 15 உதவி செவிலியர்களைக் கொண்ட மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்யு நடைபெற்று வருகிறது.

குழந்தை விற்பனை செய்யப்பட்டு வந்ததில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. குழந்தைகள் அதன் பெற்றோர்களிடம் இருந்து பேரம்பேசி வாங்கி விற்பனை செய்தனரா அல்லது மருத்துவமனைகளில் இருந்தோ, பெற்றோர்களிடம் இருந்தோ  குழந்தைகளை திருடி விற்கப்பட்டதா  என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.