பெங்களூரு:
ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் 4வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் அமையும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
மோடி அரசின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அவருக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளனர். நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. தேர்தல் முடிவுகள் வரட்டும். காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சி அமைக்கும். தேவைப்பட்டால், ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை கேட்டுப்பெறுவோம் என்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில், பா.ஜனதாவைத் தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் பின்தங்கி உள்ளன. இதுவரை இருந்த பிரதமர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் பெயரை சொல்லித்தான் ஓட்டு கேட்டார்கள். ஆனால், தன் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் முதலாவது பிரதமர் மோடிதான் என்று குற்றம் சாட்டியவர், அது பாஜகவின் உண்மையான முகத்தை காட்டுகிறது…
இவ்வாறு அவர் கூறினார்.